விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.10½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.10½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.10½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

சுத்தம் செய்யும் பணி

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்்த விமானங்களில் வரும் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8.20 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, விமான நிறுவன பணியாளர்கள் அந்த விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தங்க கட்டிகள்

அப்போது அந்த விமானத்தின் கழிவறையில் பொட்டலம் போன்று ஒன்று கிடந்தது. இதைக்கண்ட பணியாளர் உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், அந்த பொட்டலத்தை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.

அப்போது அதில் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 2 தங்க கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த பயணி யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அச்சத்தில் விட்டுச்சென்ற பயணி

சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த பயணி, சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கி விடுவோமா? என்ற அச்சத்தின் காரணமாக விமான கழிவறையில் அதனை விட்டுச் சென்றிருக்கலாம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story