ரூ.10 லட்சத்தை, திருமண மண்டப நிர்வாகம் திரும்ப வழங்க உத்தரவு
ரூ.10 லட்சத்தை, திருமண மண்டப நிர்வாகம் திரும்ப வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமரைக்குளம்:
சென்னை சிட்லபாக்கம் சங்கராபுரம் லே-அவுட்டில் வசிப்பவர் வெங்கடேசன்(வயது 61). ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர், கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருந்த தனது மகளின் திருமணத்திற்காக 2 நாட்களுக்கு சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தை, 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் முழு வாடகை தொகை ரூ.10 லட்சத்து 83 ஆயிரத்தை செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். ஆனால் தவிர்க்க இயலாத காரணத்தால் அவரது மகளின் திருமணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் முன்பதிவை ரத்து செய்துவிட்டு, தான் செலுத்திய பணத்தை தருமாறு, முன்பதிவு செய்த 2 வார காலத்திலேயே அவர் திருமண மண்டப நிர்வாகத்திடம் கடிதம் அளித்துள்ளார். ஆனால் திருமண மண்டப நிர்வாகம் சார்பில் முன்பதிவை ரத்து செய்யும்போது, எவ்வித தொகையும் வழங்க முடியாது என்று அவருக்கு தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், தான் செலுத்திய தொகையை திரும்ப வழங்கக்கோரி சென்னை தெற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், திருமண மண்டபத்துக்கு வெங்கடேசன் செலுத்திய தொகையில் 5 சதவீதம் பிடித்துக்கொண்டு ரூ.10 லட்சத்து 28 ஆயிரத்து 850-ஐ அவருக்கு நான்கு வார காலத்திற்குள் திரும்ப வழங்க வேண்டும். தவறினால் இந்த தொகைக்கு வட்டியை திருமண மண்டப நிர்வாகம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் திருமண மண்டப முன்பதிவை ரத்து செய்தால், எவ்வளவு காலத்திற்கு முன்பாக ரத்து செய்யப்படுகிறது என்பதை பொறுத்து குறிப்பிட்ட அளவு தொகையை பிடித்தம் செய்து கொள்ள வேண்டுமே தவிர, முழு தொகையையும் பிடித்தம் செய்வது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளது.