நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு


நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2023 12:30 AM IST (Updated: 8 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டியதாக கூறி நடுக்கடலில் நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிக்கப்பட்டதுடன், விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

எல்லை தாண்டியதாக கூறி நடுக்கடலில் நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிக்கப்பட்டதுடன், விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இலங்கை கடற்படைதொடர் அட்டூழியம்

இலங்கையை ஒட்டிய தமிழக கடல் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் இலங்கையின் கடற்படை மற்றும் அந்த நாட்டை சேர்ந்த மீனவர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து செல்வது தொடர்ந்து நடக்கிறது.

சில நேரங்களில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொடூர தாக்குதல்களிலும் ஈடுபடுகிறார்கள். பல்வேறு வகைகளிலும் தமிழக மீனவர்களுக்கு இலங்ைக கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறார்கள்.

நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு

இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்து சென்றிருப்பது நாகை மாவட்ட மீனவர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 44). மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 3-ந் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வகுமார், ராஜா, பொண்ணுராஜா, இளையராஜா, கணபதி, சாய் சிவா, முகேஷ், அரவிந்த், அழகு, வேலு ஆகிய 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மற்றொரு படகில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்களை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர்.

திரிகோணமலைக்கு அழைத்து சென்றனர்

பின்னர் மீனவர்கள் வந்த விசைப்படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததுடன், மீனவர்களை இலங்கையில் உள்ள திரிகோணமலைக்கு அழைத்துச்சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட மீனவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய வேண்டும். விசைப்படகை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நாகை மாவட்ட மீனவர்கள், தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளனர்.


Next Story