இயற்கை வேளாண்மை பொருட்களை விற்க 10 புதிய அங்காடிகள்


இயற்கை வேளாண்மை பொருட்களை விற்க 10 புதிய அங்காடிகள்
x

தஞ்சை உழவர் சந்தையில் இயற்கை வேளாண்மை பொருட்களை விற்க 10 புதிய அங்காடியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் இயற்கை வேளாண்மை பொருட்கள் மற்றும் பாரம்பரிய தின்பண்டங்கள் விற்பனை செய்வதற்காக 10 புதிய அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, அங்காடியை திறந்து வைத்து இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட கீரை வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்ட இயற்கை விளை பொருட்களை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

பாரம்பரிய இயற்கை விதைகள்

தஞ்சை மாவட்டத்தில் 15 டன் பாரம்பரிய விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 9 டன் பாரம்பரிய இயற்கை விதைகள் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் 5 உழவர் சந்தைகளையும் சேர்த்து நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.21 லட்சம் மதிப்புள்ள 55 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் 175 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சை உழவர் சந்தையில் உள்ள 71 கடைகளின் மூலம் தினமும் சராசரியாக ரூ.6 லட்சம் மதிப்புள்ள 15 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் 65 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

சிறுதானியங்கள்

தஞ்சை உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சார்பில் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், எண்ணெய் வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பாரம்பரிய கைக்குத்தல் அரிசி வகைகள், கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார் போன்ற அரிசி வகைகள், அவல், செக்கு எண்ணெய், நாட்டு கருப்பட்டி, பருப்பு முறுக்கு, கடலை, சர்க்கரை வகைகள், எள் உருண்டை போன்ற பாரம்பரிய உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

விழாவில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் மரியரவி ஜெயக்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சாருமதி, இயற்கை வேளாண்மை வல்லுனர் சித்தர் மற்றும் இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால் ஜெபசிங் மற்றும் உழவர் சந்தை அலுவலர்கள் மேற்கொண்டனர்.


Next Story