குழந்தைகள் உள்பட மேலும் 10 பேர் அகதிகளாக வருகை


குழந்தைகள் உள்பட மேலும் 10 பேர் அகதிகளாக வருகை
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குழந்தைகள் உள்பட மேலும் 10 பேர் அகதிகளாக வந்தனர்.

ராமநாதபுரம்

தனுஷ்கோடி,

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குழந்தைகள் உள்பட மேலும் 10 பேர் அகதிகளாக வந்தனர்.

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு சமானிய மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அந்நாடு இயல்பு நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகளாக மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வரும் நிலை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே 199 பேர் அகதிகளாக வந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தனர்.

விசாரணை

இலங்கையில் தலைமன்னார் பேசாலை பகுதியில் இருந்து படகு ஒன்றின் மூலமாக 3 குடும்பங்களை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 10 பேர் வந்தனர்.

தனுஷ்கோடி அருகே உள்ள எம்.ஆர்.சத்திரம் கடற்கரைக்கு வந்து அவர்களை இறக்கிவிட்டு, அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள் இலங்கையை நோக்கி திரும்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

.இதுகுறித்து நேற்று அதிகாலை தகவல் கிடைத்ததும் ராமேசுவரம் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் 10 பேரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

படகோட்டிகளுக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்ததோடு, சில தங்க நகைகளையும் கொடுத்து அங்கிருத்து தப்பி வந்ததாக அகதிகள் தெரிவித்தனர். போலீசார் விசாரணைக்கு பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story