டால்பின்களை வேட்டையாடிய குமரி மீனவர்கள் உள்பட 10 பேர் கைது
குஜராத் பகுதி ஆழ்கடலில் டால்பின்களை வேட்டையாடிய குமரி மீனவர்கள் உள்பட 10 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
கொல்லங்கோடு:
குஜராத் பகுதி ஆழ்கடலில் டால்பின்களை வேட்டையாடிய குமரி மீனவர்கள் உள்பட 10 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
இந்திய கடற்படையினர் சோதனை
குமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.
ஆழ்கடலில் 1 மாதம் வரை தங்கி மீன்பிடிப்பது வழக்கம். அந்த வகையில் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ஆண்டனி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் குமரி மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இருந்தனர். இந்த மீனவர்கள் சம்பவத்தன்று குஜராத் பகுதியில் உள்ள ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படையினர் விசைப்படகை வழிமறித்தனர். பின்னர் அந்த படகில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது அங்கு அரிய வகை மீன்களான டால்பின் மற்றும் சுறா மீன்கள் இருந்தது. கடலில் டால்பினை வேட்டையாட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மீனவர்கள் கைது
ஆனால் இதனை மீறி டால்பினை மீனவர்கள் வேட்டையாடி விற்பனைக்காக படகில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய கடற்படையினர் படகின் உரிமையாளர் ஆண்டனி உள்பட 10 பேரை கைது செய்தனர்.
பின்னர் படகுடன் மீன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீனவர்களை குஜராத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். டால்பினை வேட்டையாடியதாக குமரி மீனவர்கள் உள்பட 10 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்த சம்பவம் குமரி மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.