நெல்லை மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஓராண்டுக்கு பின்னர் கடந்த 4-ந்தேதி 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்று முதல் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
நேற்று நிலவரப்படி நெல்லை மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த 6 பேர், மானூரை சேர்ந்த 2 பேர், வள்ளியூர், ராதாபுரம் பகுதிகளை சேர்ந்த 2 பேர் என 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் சுகாதாரத்துறையினருக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு நோய் பரவல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.