ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை-ரூ.90 ஆயிரம் திருட்டு
கந்தர்வகோட்டை அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை-ரூ.90 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை-கறம்பக்குடி சாலை காமராஜர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி செயலாளர். இவர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு திருச்சி காட்டூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு குடும்பத்தோடு சென்று விட்டார்.
இவரது வீட்டின் அருகில் வீரடிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் ஜெயா என்பவர் வசித்து வருகிறார். இவரும் கடந்த 2 தினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
10 பவுன் நகை திருட்டு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர் அருகில் இருந்த பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஜெயா, இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசாருக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் தகவல் கொடுத்தார்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியன் திருச்சியில் இருந்து கந்தர்வகோட்டைக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.90 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றது ெதரியவந்தது.
வலைவீச்சு
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கந்தர்வகோட்டையில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி உள்பட 2 பேர் வீடுகளில் நகை-பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.