மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு மர்மநபரை விரட்டி சென்றபோது தவறி விழுந்து தாய்- மகள் காயம் அடைந்தனர்.
நாட்டறம்பள்ளி அருகே உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். அவரை விரட்டி சென்றபோது நிலை தடுமாறி விழுந்து தாய்- மகள் காயமடைந்தனர்.
நாட்டறம்பள்ளி அருகே உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். அவரை விரட்டி சென்றபோது நிலை தடுமாறி விழுந்து தாய்- மகள் காயமடைந்தனர்.
நகை பறிப்பு
நாட்டறம்பள்ளியை அடுத்த டோல்கேட் முத்தனபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி சங்கீதா (வயது 36), இவரும் இவரது மகள் ஷர்மிளாவும் (18) புதுப்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தங்கள் வீட்டில் இருந்து மொபட்டில் சென்றனர். ஷர்மிளா மொபட்டை ஓட்ட, சங்கீதா பின்னால் அமர்ந்து சென்றார்.
புதுப்பேட்டை அக்ரஹாரம் மலையடிவாரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே செல்லும் போது, மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாதா நபர் ஒருவர் மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்ற சங்கீதா கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.
தவறிவிழுந்து காயம்
அவரை பிடிப்பதற்காக ஷர்மிளா மொபட்டை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது மொபட் நிலை தடுமாறி சங்கீதாவும், ஷர்மிளாவும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.