சத்துணவு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை


சத்துணவு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
x

கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த லோகம்மாள்.

ஓட்டப்பிடாரம் அருகே சத்துணவு ஊழியர் வீட்டில் புகுந்து 10 பவுன் நகை, ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள், மூதாட்டியை தாக்கி கம்மலையும் பறித்து சென்றனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குமரெட்டியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மாரியம்மாள் (வயது 45). இவர் எப்போதும்வென்றான் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கினார். அப்போது அவர் தனது அருகில் வீட்டு சாவியை வைத்திருந்தார். இந்த நிலையில் இரவில் அங்கு வந்த மர்மநபர்கள், அந்த சாவியை நைசாக எடுத்து வீட்டை திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்பையா (74) வெளியூருக்கு சென்று இருந்தார். அவரது வீட்டின் கதவையும் உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். ஆனால் அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.அதே ஊர் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி லோகம்மாள் (60) காற்றுக்காக வீட்டு வளாகத்தில் இரவில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவர் அணிந்திருந்த 4 கிராம் கம்மலை பறிக்க முயன்றது. உடனே விழித்துக் கொண்ட லோகம்மாள் கூச்சலிட்டார். அதற்குள் அந்த கும்பல் அவரை தாக்கி கம்மலை பறித்து சென்று விட்டது. இதில் காயம் அடைந்த அவர் எப்போதும்வென்றான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக பசுவந்தனை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில், 3 இடங்களிலும் கைவரிசை காட்டியது ஒரே கும்பல்தான் என்று தெரியவந்து உள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story