வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு 'சீல்'


வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

வாடகை உயர்வு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நகராட்சி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் குறைந்த வாடகையில் இயங்கியதால், நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லாமல் போனது. இதனால் நகராட்சியின் செலவினங்களை ஈடு செய்ய முடியாமல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு நகராட்சி மார்க்கெட் கடைகளின் வாடகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட வாடகையை வழங்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர். எனினும் வியாபாரிகளுக்கு வாடகையை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டதே தவிர வாடகை குறைக்கப்படவில்லை.

'சீல்' வைப்பு

இதற்கிடையில் பெரும்பாலான வியாபாரிகள் வாடகையை செலுத்தினார்கள். எனினும் சில வியாபாரிகள் வாடகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது.

அதன்பிறகும் வாடகையை செலுத்தாததால் கடைக்கு சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று 10 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை 140 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஊட்டி நகராட்சியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் வரி பாக்கி, வாடகை பாக்கி, குத்தகை பாக்கியை வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதால், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது என்றனர்.


Next Story