தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவ-மாணவிகள் காயம்
திருவேங்கடம் அருகே, தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். இதனால் அந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே, தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். இதனால் அந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பள்ளி வேன்
தென்காசி மாவட்டம் குருவிகுளம் அடுத்துள்ள செவல்குளம் விலக்கில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பள்ளியில் கோடை விடுமுறை விடப்பட்டு மாணவ-மாணவிகளை வீடுகளில் இறக்கி விடுவதற்காக பள்ளி வேன் புறப்பட்டது.
செவல்குளம், கோபாலகிருஷ்ணாபுரம், அழகாபுரி, பெருங்கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளை வேனில் பயணம் செய்தனர்.
கவிழ்ந்தது
செவல்குளம் அடுத்த கோபாலகிருஷ்ணாபுரம் வழியாக வேன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மழை பெய்து சாலையில் சேரும், சகதியுமாக இருந்ததால் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
அந்த வேனில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிக்கி கதறினர். அதில் சுமார் 10 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.
மாணவ-மாணவிகளின் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். அவசரகால கதவை உடைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் அலறியடித்து வந்து தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
பொதுமக்கள் போராட்டம்
கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்த குருவிகுளம் போலீசார் முயற்சி செய்தனர்.
அப்போது கோபாலகிருஷ்ணாபுரம் பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மிகவும் குறுகளாகவும், உயரமாக இருப்பதாகவும், இதனால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடிகிறது, வேறு வாகனம் செல்ல முடியவில்லை, எனவே இந்த சாலையை அகலப்படுத்தி தார்ரோடு அமைத்து சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, கவிழ்ந்த வேனை எடுக்கக்கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுதிர் தலைமையில் போலீசார் மற்றும் திருவேங்கடம் வருவாய்த்துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு போலீசார் வாகனத்தை மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.