வெறிநாய்கள் கடித்து 10 கோவில் ஆடுகள் பலி


வெறிநாய்கள் கடித்து 10 கோவில் ஆடுகள் பலி
x

வத்தலக்குண்டு அருகே, வெறிநாய்கள் கடித்து 10 கோவில் ஆடுகள் பலியானது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே, வெறிநாய்கள் கடித்து 10 கோவில் ஆடுகள் பலியானது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியில், பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பெண்கள் பங்கேற்பதில்லை. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகளை வழங்குவது வழக்கம். இவை திருவிழா நாளில் பலியிட்டு, அடுத்த நாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

திருவிழா நடைபெறும் ஆடி மாதத்துக்கு முன்பு சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் ஆடுகளை கோவிலில் பக்தர்கள் விட்டு செல்கிறார்கள். ஆனால் இந்த ஆடுகளை அடைத்து வைத்து பராமரிக்கும் வகையில் கோவிலில் தொழுவம் கிடையாது.

இதனால் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் விட்டு சென்ற ஆடுகள், வத்தலக்குண்டு பகுதியில் ஆங்காங்கே சுற்றித்திரிவது வாடிக்கையாகி விட்டது. அப்பகுதி மக்கள் கொடுக்கிற தீவனங்களை தின்று வலம் வருகின்றன.

10 ஆடுகள் பலி

இரவு நேரத்தில் கோவில் ஆடுகள் ஆங்காங்கே தெருவோரங்களில் படுத்து கிடக்கின்றன. இதனை குறி வைத்து வெளியூர்காரர்கள் ஆடுகளை திருடி செல்கின்றனர். அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 20 ஆடுகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று 10 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியது. இதில் அந்த ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வருமானம் வரக்கூடிய கோவிலை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலையத்துறையினர், தொழுவம் அமைத்து ஆடுகளை பராமரிக்காமல் இருப்பது புரியாத புதிராக இருப்பதாக பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.


Next Story