ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில்:
ராஜாவூரை அடுத்த மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி ஜோஸ்பின். கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு செல்வதற்காக ஜோஸ்பின் மற்றும் அவரது மகன் ஜெரி ஆகியோா் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்தனர். பின்னர் ரெயிலில் ஏறி முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் இருவரும் அமர்ந்தனர். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், ஜோஸ்பினிடம் டிக்கெட்டை வாங்கி சரிபார்த்தார். அதில் மகன் பெயர் ஜெரி என்று இருப்பதற்கு பதிலாக ஜாண் என்று இருந்தது. இதனால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ளவர்கள் நீங்கள் இல்லை என கூறி அவர்களை முன்பதிவு செய்யப்படாத பெட்டிக்கு செல்லும்படி கூறினார்.
இதனைதொடர்ந்து தாய், மகன் இருவரும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்தனர். இதுதொடர்பாக ஜோஸ்பின் குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ரெயில்வே நிர்வாகத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஜோஸ்பினுக்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம் அபராதமாகவும், வழக்கு செலவு ரூ.5 ஆயிரத்தையும் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.