பதிவேடுகளை முறையாக பராமாித்ததால் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை


பதிவேடுகளை முறையாக பராமாித்ததால் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் போலீஸ் நிலையங்களில் திடீரென ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பதிவேடுகளை முறையாக பராமாித்ததால் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்கினார்.

கடலூர்

கடலூர் முதுநகர்:

கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு புதுச்சேரி வழியாக கடலூர் வருகை தந்தார். வரும் வழியில் கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நிலுவையில் உள்ள முக்கிய குற்ற வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் பதிவேடுகளை நல்ல முறையில் பராமரித்ததற்காக ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் அங்கிருந்த போலீசாரிடம் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிகழ்ச்சி முடிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்த டி.ஜி.பி., காவலர் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊக்கத்தொகை

அதனை தொடா்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வழக்கு பதிவேடுகள் மற்றும் இதர ஆவணங்கள் முறையாக உள்ளதா? என ஆய்வு செய்தார். அனைத்து பதிவேடுகளும், ஆவணங்களும் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றும் அவர் கண்டறிந்தார். இதில் அனைத்து ஆவணங்களும், பதிவேடுகளும் முறையாக இருந்ததை அடுத்து, கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமாரை பாராட்டி ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் போலீஸ் நிலையத்துக்கு அளித்தார். இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story