வீட்டுவசதித்துறை மூலம் 10 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும்


வீட்டுவசதித்துறை மூலம் 10 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும்
x
தினத்தந்தி 13 Nov 2022 6:45 PM GMT (Updated: 13 Nov 2022 6:45 PM GMT)

வீட்டுவசதித்துறை மூலம் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வீடுகள் விரைவில் கட்டப்பட உள்ளதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

விழுப்புரம்

விழுப்புரம்

அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்த முடியதாத நிலையில் உள்ள கட்டிடங்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழுதடைந்த வீடுகள்

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டு வசதி வாரிய துறை சார்பில் பானாம்பட்டு பகுதியில் 72 வீடுகள் 2 ஏக்கர் 68 சென்ட்டிலும், மகராஜபுரத்தில் 120 வீடுகள் 3 ஏக்கர் 1 சென்ட்டிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால் குடியிருப்பதற்கு தகுதியற்றது என கருதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் புதிய வீடுகள் கட்டுவதற்கன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே 96 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இனிமேல் இதுபோல 2 அல்லது 3 மடங்கு அளவில் கட்டிடங்கள் கட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.

10 ஆயிரம் வீடுகள்

தமிழகத்தில் 60 இடங்களில் வாடகை குடியிருப்புகள் மோசமான நிலையில் உள்ளன. தற்பொழுது இந்த குடியிருப்புகளை இடிப்பதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் அங்கு உடனடியாக புதிய வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் 100 சதவீதம் தரத்துடன், 50 ஆண்டு காலத்துக்கு பாதிப்பு ஏற்பாடாதவாறு வகையில் கட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. ஒரே கட்டமாக 60 இடங்களிலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்படும். இதில் குடியிருப்பவர்களும் அவ்வப்போது பராமரித்தால் வீடுகள் உறுதியுடன் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு .ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பராஜ், நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, வீட்டு வசதி வாரிய தலைமை பொறியாளர் கண்ணன், செயற்பொறியாளர் அன்புமணி, தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, பொருளாளர் இளங்கோ உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story