ஆந்திராவிற்கு லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஆந்திராவிற்கு லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

வேலூர் அருகே ஆந்திராவிற்கு லாரியில் 10 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

வேலூர் அருகே ஆந்திராவிற்கு லாரியில் 10 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பென்னாத்தூர் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் பென்னாத்தூர்-சாத்துமதுரை ரோட்டில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். அதில், ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது அவை ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து லாரி டிரைவர் உள்பட 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் வேலூரை அடுத்த பொய்கை மோட்டூரை சேர்ந்த லாரி உரிமையாளரும், டிரைவருமான ராமச்சந்திரன் (வயது 41), சுரேஷ் (36) என்பதும், இருவரும் சேர்ந்து பொய்கை மோட்டூரில் இருந்து ஊசூர், பென்னாத்தூர், சாத்துமதுரை வழியாக ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து லாரியில் 200 மூட்டைகளில் இருந்த 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ராமச்சந்திரன், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story