மேகமலை வனப்பகுதியில் அனுமதியின்றி டிரக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் 10 பேர் சிக்கினர்


மேகமலை வனப்பகுதியில் அனுமதியின்றி டிரக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் 10 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே மேகமலை வனப்பகுதியில் அனுமதியின்றி டிரக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் 10 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

வனப்பகுதியில் டிரக்கிங்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை வன உயிர்கள் சரணாலயம் உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, தேயிலை தோட்டங்களை கண்டு ரசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு புலிகள் சரணாலய பகுதி என்பதால் இங்கு மலையேற்ற பயிற்சி (டிரக்கிங்) செல்ல அனுமதி கிடையாது. ஆனால் தேயிலை தோட்டங்களை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் அதனை கடந்து வனப்பகுதிக்குள் செல்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று 10 பேர் 2 ஜீப்புகளில் வனப்பகுதியில் சென்றதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அங்கு விரைந்து சென்றனர்.

10 பேர் சிக்கினர்

அப்போது ஹைவேவிஸ் அருகே மணலாறு பகுதியில் உள்ள வட்டப்பாறை வனப்பகுதியில் 2 ஜீப்புகள் சென்றது. அதனை மறித்து அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை அழைத்து வந்து ஹைவேஸ் பகுதியில் உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான கட்டிடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். விசாரணையில், பிடிபட்ட 10 பேரும் ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா வந்தனர்.

அவர்கள் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களிடம் விடுதிக்கு சொந்தமான ஜீப் டிரைவர் சிவக்குமார், தனியார் ஜீப் டிரைவர் நிஷாந்த் ஆகிய 2 பேரும் பேசினர். அப்போது அவர்கள் சுற்றுலா பயணிகளை டிரக்கிங் அழைத்து செல்வதாக கூறினர். இதை நம்பிய அவர்கள் வனப்பகுதியில் டிரக்கிங் செல்ல ஆசைப்பட்டு சென்றனர். அங்கு டிரக்கிங் சென்றபோது வனத்துறையினரிடம் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி டிரக்கிங் அழைத்து சென்றதற்காக டிரைவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story