டாஸ்மாக் கடை அமைக்க 10 கிராம மக்கள் எதிர்ப்பு
கந்திலி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 10 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கந்திலி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 10 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
முற்றுகை
கந்திலி, கோவிலூர், தென்னையன் வட்டம், தண்ணீர்கிணறு, ஏரிங்கீழுர், தொங்கானனூர், மோட்டூர், கரடிகானூர், பரதேசிபட்டி ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து 5 பேர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்கலாம் என போலீசார் கூறினர்.
அதைத்தொடர்ந்து 7 பேர் கலெக்டர் அமர்குஷ்வாஹாவை சந்தித்து மனு கொடுத்தனர். பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது
கந்திலி அடுத்த மோட்டூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை அமைக்க நீண்ட நாட்களுக்கு முன்பு தனியார் ஒருவர் தனது நிலத்தில் கடை கட்டினார். அந்த இடத்தில் குடியிருப்பு, கோவில்கள், பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் பிரதான சாலை ஆகும். இதனால் வேலைக்கு செல்லும் பெண்களும், பள்ளி மாணவிகளும் பாதிக்கப்படுவார்கள். எனவே அந்தசாலையில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என கோரிக்கை விடுத்து வந்தோம்.
அதைத்தொடர்ந்து அதனை அதிகாரிகள் கைவிட்டனர். இந்தநிலையில் திடீரென தற்போது மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார், கந்திலி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து இருந்தோம். இதனிடையே கடந்த 9-ந் தேதி திடீரென குறைந்த அளவில் மதுபான பெட்டிகளை இறக்கி வைத்து மது விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனை அறிந்த ஊர்பொதுமக்கள் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். மேலும் பெண்களையும், பொதுமக்களையும் பாதிக்கும் இடத்தில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்,