கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை- மதுரை கோர்ட்டு தீர்ப்பு


கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை- மதுரை கோர்ட்டு தீர்ப்பு
x

கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மதுரை


தேனி மாவட்டம் கம்பம் கே.கே.பட்டி பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள திராட்சை தோட்டத்தின் அருகில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் 32 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக அதை பறிமுதல் செய்த போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்த சேக்கிபட்டி மோத்தீஸ் (வயது 29), நவீன்குமார் (37), கே.கே.பட்டி ரத்தீஸ் (31) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார். விசாரணை முடிவில், 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story