கேரள வாலிபர்கள் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
கஞ்சா கடத்தல் வழக்கில், கேரள வாலிபர்கள் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் வெள்ளிமலை செல்லும் சாலையில், கடமலைக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதற்குள் 38 கிலோ கஞ்சா இருந்தது. அந்த காரில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காரமேடு அருகே வெள்ளாரா அம்பலத்து விளக்கம் பகுதியை சேர்ந்த பிரசாந்த்ராஜ் (வயது 32), கொல்லம் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த சஹாநாத் (28) ஆகிய 2 பேரும் வந்தனர். அவர்கள் இருவரும் அந்த கஞ்சாவை கேரளாவுக்கு கடத்திச் செல்லும் போது சிக்கினர்.
இந்த சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்ராஜ், சஹாநாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கார் மற்றும் 38 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு மதுரையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பு கூறினார்.
கஞ்சா கடத்திய பிரசாந்த்ராஜ், சஹாநாத் ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.