கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை
கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்:
கல்வராயன்மலை அருகே உள்ள மலையரசம்பட்டு கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புற பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கடந்த 26.2.2021 அன்று விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், அக்கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சடையன் (வயது 55) என்பவரின் வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் அங்கு 25 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சடையன் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் கஞ்சாவை பொட்டலங்களாக போட்டு அவரும், துரூர் கிராமத்தை சேர்ந்த ஆண்டி (62) என்பவரும் கல்வராயன்மலை பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சடையன், ஆண்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
2 பேருக்கு சிறை
பின்னர் இதுதொடர்பாக போலீசார், விழுப்புரம் போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கும் உளசார்புள்ள பொருட்கள் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி, குற்றம் சாட்டப்பட்ட சடையனுக்கு கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், இவருக்கு உடந்தையாக இருந்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஆண்டிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.