100 கால்நடை சுகாதார முகாம்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 கால்நடை சுகாதார முகாம்கள் வருகிற 2-ந்தேதி முதல் நடைபெற உள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 கால்நடை சுகாதார முகாம்கள் வருகிற 2-ந்தேதி முதல் நடைபெற உள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கால்நடை சுகாதார முகாம்
அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் பயன்பெறும் வகையில் 2022-23-ம் ஆண்டிற்கு தமிழக அரசால், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
அதன்படி மாவட்டத்தில் வருகிற 2-ந்தேதி முதல் ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 5 ஒன்றியத்திற்கு 100 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் செய்யப்பட உள்ளன.
பரிசு வழங்கப்படும்
மேலும் கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுனர்கள் பதிலளிக்க உள்ளனர். அதுமட்டுமில்லாமல் கிடேரிகன்று பேரணி நடத்தி சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த அரியவாய்ப்பினை விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.