100 மூட்டை ரேஷன் அரிசி கடத்தப்பட்டதா?
எமரால்டு அணையில் கொட்டப்பட்ட 100 மூட்டை ரேஷன் அரிசி கடத்தலுக்காக கொண்டு செல்லப்பட்டதா? என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்சூர்,
எமரால்டு அணையில் கொட்டப்பட்ட 100 மூட்டை ரேஷன் அரிசி கடத்தலுக்காக கொண்டு செல்லப்பட்டதா? என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி மூட்டைகள்
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் இருந்து கேரளா மாநிலத்துக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், ரேஷன் அரிசி கடத்தலை முழுவதுமாக தடுக்க முடியவில்லை.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த எமரால்டு அணை பகுதியில் இருந்து எமரால்டு வேலி செல்லும் பகுதியில் உள்ள அண்ணாநகர் சுருக்கி பாலம் பகுதியில் 25 கிலோ எடை கொண்ட 100 மூட்டை ரேஷன் அரிசி அணையில் கொட்டப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கும், எமரால்டு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
கடத்தப்பட்டதா?
இதையடுத்து அணையில் கொட்டப்பட்டு இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி ஆய்வுக்காக குன்னூருக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி ரேஷன் அரிசி கொட்டப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர சோதனையாளர் பிச்சை முருகன், தாலுகா வழங்கல் அலுவலர், தடயவியல் துறையினர் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் உறைபனி காரணமாக அணையில் கடும் குளிர் நிலவுவதால் தண்ணீருக்குள் இறங்கி அரிசி மூட்டைகளை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து வழங்கல் துறையினர் கூறும்போது, ஆய்வுக்காக குன்னூருக்கு அனுப்பப்பட்ட அரிசி, நீண்ட நேரம் தண்ணீரில் ஊறியிருப்பதால் ரேஷன் அரிசிதானா என தற்போது வரை உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் தடயவியல் துறையினர் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த அரிசி கடத்தலுக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அதிகாரிகளுக்கு பயந்து அணையில் கொட்டி இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.