திருச்சுழி பகுதியில் 100 மூடை மணல் பறிமுதல்
திருச்சுழி பகுதியில் 100 மூடை மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரியாபட்டி,
திருச்சுழி பகுதியில் 100 மூடை மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணல் திருட்டு
திருச்சுழி குண்டாறு பகுதியில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட கனிமவளத்துறையினர் திருச்சுழி, உடையனேந்தல், காரியாபட்டி ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் திருச்சுழி பகுதியில் அவ்வப்போது மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பகுதியில் நூதன முறையில் மணல் திருடப்பட்டு வருகிறது. ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், மூடியநிலையில் உள்ள வேன்களிலும் ஒரு சிலர் மணல் திருடி வருகின்றனர். திருச்சுழி பகுதியில் நூதன முறையில் மணல் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
100 மூடை பறிமுதல்
இதனையடுத்து திருச்சுழி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மணல் திருட்டு சம்பந்தமாக குண்டாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உடையனாம்பட்டி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் அருகே குண்டாற்று பகுதியில் இருந்து மணல் மூடைகளை ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்த வேன் அருகே சென்ற போது அங்கிருந்து நபர்கள் வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வேனை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி 100 மூடை மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேன் மற்றும் மணல் மூடைகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.