கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.34 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம்அமைச்சர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்
கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.34 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, தேசிய சுகாதார திட்ட அலுவலர் டாக்டர் காரல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மண்டல தலைவர்கள் சங்கீதா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி, பாலசுந்தர், செந்தில்குமாரி, சுபாஷினி ராஜா, சுதா அரங்கநாதன், கவிதா ரகுராமன், விஜயலட்சுமி செந்தில், சரிதா, ஹேமலதா சுந்தரமூர்த்தி, சசிகலா ஜெயசீலன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
100 படுக்கை வசதி
கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.34 கோடி செலவில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் தரை தளம், முதல் தளம், 2-வது தளம் என 3 தளங்களில் கட்டிடம் அமைய இருக்கிறது. அனைத்து வசதிகளும் இந்த ஆஸ்பத்திரியில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இருதய நோய் சிகிச்சை பிரிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். மத்திய அரசு விதிகளுக்குட்பட்டு, அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி அரசு கல்லூரியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக மருத்துவக்கல்லூரி வர வாய்ப்பு இல்லை.
முறியடிப்பு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நிரவல், வேறு துறைகளுக்கு பணியிடம் மாற்றுதல் போன்றவை முழுமை பெற்ற பிறகு மருத்துவக்கல்லூரியில் அனைத்து சிகிச்சை பிரிவுகளும் கொண்டு வரப்படும். கூடுதலாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியும் தரம் உயர்த்தப்படும்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க.மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து வருகிறாரே என்கிறீர்கள். பொய்யை மூலதனமாக வைத்து பேசுகிறார். மக்களே அண்ணாமலை பேசுவது பொய் என்று சொல்கிறார்கள். அவர்களது கட்சியினரே அவர் மீது குற்றஞ்சாட்டி வருகிறார்கள். பொய்யாக பேசுவது தான் அவரது நிலைப்பாடு. தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்தது. தற்போது அந்த முயற்சி அவரது கட்சியினராலே முறியடிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.