சரக்கு வேனில் போலி முத்திரையுடன் இருந்த 100 சிமெண்டு மூட்டைகள் பறிமுதல்
சரக்கு வேனில் போலி முத்திரையுடன் இருந்த 100 சிமெண்டு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி, டேனிஷ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தனியார் சிமெண்டு நிறுவனத்தின் போலி முத்திரையுடன் கூடிய சிமெண்டு மூட்டைகள் விற்கபடுவதாக அந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் சேலம் அழகாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சுப்பையா (வயது 40) என்பவருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் தீவட்டிப்பட்டி, டேனிஷ்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் தணிக்கை செய்தார். அப்போது டேனிஷ்பேட்டை அருகே உள்ள ஒரு சிமெண்டு கடையின் முன்பு நின்று கொண்டிருந்த சரக்கு வேனை தணிக்கை செய்தார். அதில் அந்த தனியார் நிறுவனத்தின் முத்திரையை போலியாக அச்சடித்து சுமார் 100 மூட்டை சிமெண்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சரக்கு வேன் மற்றும் சிமெண்டு மூட்டைகளை தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் விசாரணையில் தனியார் சிமெண்டு நிறுவனத்தின் போலி முத்திரையுடன் தீவட்டிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிமெண்டு, கம்பி கடைகளில் சிமெண்டு மூட்டைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து சரக்கு வேனின் உரிமையாளர் பிரதீப் (23) என்பவர் மீது தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.