அரசு கட்டிட பணிகளில் 100 நாள் வேலை பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது
அரசு கட்டிட பணியில் 100 நாள் வேலை பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
அணைக்கட்டு தாலுகாவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாசில்தார் கி.வேண்டா தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தலைமை இடத்து துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் ரேவதி முன்னிலை வகித்தனர். அகரம் வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் விவசாயிகள், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பேசியதாவது:-
கோவிந்த ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்கும் விவசாய மின் இணைப்புகளுக்கும் குறைந்த அளவு வோல்டேஜ் கிடைக்கிறது. இதனால் வீட்டில் உள்ள உபயோக பொருட்கள் செயல் இழந்து போகின்றன. கடந்த ஓராண்டாக எங்கள் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலகத்தில் இடைத்தரகர்கள் அதிகமாக உள்ளார்கள். அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
அனுமதி வழங்க வேண்டும்
அணைக்கட்டு தாலுகாவில் மழை மானி இல்லாததால் விவசாயிகள் எந்த அளவிற்கு மழை பெய்ததுஎன தெரியாமல் உள்ளனர். ஆகவே அணைக்கட்டு தாலுகாவில் மழை மானி வைக்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்த தாசில்தார் வேண்டா அணைக்கட்டு தாலுகாவில் நான்கு இடங்களில் தற்போது மழை மானி வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில் பள்ளிகொண்டா பாலாற்றில் அரசு அனுமதியுடன் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் பயன் பெறும் வகையில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துச் செல்வதற்கு தாசில்தார் அனுமதி வழங்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்த தாசில்தார் யார் யாருக்கு மணல் வேண்டும் என மனு கொடுத்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.
கட்டிட பணிகளில்...
பள்ளிகொண்டாவை சேர்ந்த விவசாயி ஒருவர் பேசுகையில் விவசாயிகள், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் வேகமாக செயல்படுகிறார். ஆனால் அதிகாரிகள் மெத்தனப்போக்கால் கோப்புகள் தேங்கி நிற்கின்றன.
ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் என்னென்ன பயிரிடலாம் என்ற விவரங்கள்அடங்கிய ஒரு பெயர் பலகை வைக்க வேண்டும். தொகுதி முழுவதும் பாரத பிரதமரின் வீடு கட்டும்திட்டம் மற்றும் தொகுப்பு வீடுகளை ஆங்காங்கே ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடபணிகளுக்கு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை ஈடுபடுத்துகிறார்கள். அவர்களை கட்டிடப்பணியில் ஈடுபடுத்தாமல் விவசாய பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.