100 நாள் வேலைதிட்ட பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
ஒடுகத்தூர் அருகே 100 நாள் வேலைதிட்ட பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
அணைக்கட்டு
ஒடுகத்தூரை அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27), 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலாஜி 100 நாள் வேலைக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த பணித்தள பொறுப்பாளர் வெங்கடேசனிடம் என்னை ஏன் அவதூறாக பேசுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
அப்போது வெங்கடேசனுக்கு ஆதரவாக புனித் என்பவரும் பாலாஜியை தாக்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பாலாஜி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உறவினர்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
என் மகன் சாவிற்கு வெங்கடேசன் தான் காரணம் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.
இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.