விவசாய பணிகளுக்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பயன்படுத்த வேண்டும்
விவசாய பணிகளுக்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று குடியாத்தத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குடியாத்தம்
விவசாய பணிகளுக்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று குடியாத்தத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்வு நாள் கூட்டம்
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார்.
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜி.சரவணன், துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் மஞ்சுநாதன், பலராமபாஸ்கர், நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் சீனிவாசன், அரசு மருத்துவமனை டாக்டர் சதீஷ்குமார், வனவர் நேதாஜி, வேளாண்மைதுறையை சேர்ந்த நித்தியா, தோட்டக்கலை துறையைச் சேர்ந்த தமிழரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
குடியாத்தம் உழவர்சந்தை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர் உழவர் சந்தை வெளியே காய்கறி கழிவுகள் பல நாட்களாக தேங்கியுள்ளது
இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும.் மேலும் அப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருக்க கேமராக்களை பொருத்த வேண்டும்.
100 நாள் பணியாளர்கள்
பல்வேறு பகுதிகளில் நிலம் அளக்க மனு கொடுத்தும் நீண்ட நாட்கள் ஆகிறது. உடனடியாக நிலங்களை அளக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் எந்தெந்த விவசாய பணிகளுக்கு அந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தலாம் என விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
விவசாய பணிகளுக்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்.
தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகளில் விவசாயிகளுக்கு உள்ள சலுகைகள், சொட்டு நீர் பாசன திட்டங்கள், விதை நாற்றுகள் வழங்குவது குறித்து அதிகாரிகள் விரிவாக பேசினார்கள்.
கல்வி உதவித்தொகை
மேலும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கல்வி உதவித்தொகை 5 பேருக்கும், விபத்து மரணம் உதவித்தொகை 19 பேருக்கும், இயற்கை மரணம் உதவித்தொகை 100 பேருக்கும் என பல லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பது மிகவும் குறைவாக உள்ளது. எனவே, விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.