100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல்


100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல்
x

வாணியம்பாடி அருகே 100 நாட்கள் வேலை திட்ட பணியர்களுகு 6 மாதங்களாக கூலி வழங்கவில்லை என்று கூறி அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

சம்பளம் வழங்கவில்லை

வாணியம்பாடியை அடுத்த தும்பேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 100 நாள் பணியில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு வேலை வழங்காமல், வார்டு உறுப்பினர்கள் தங்கள் நிலங்களில் கேழ்வரகு அறுவடை செய்யவும், களை எடுத்தல் உள்ளிட்ட தங்கள் விவசாய நிலங்களில் உள்ள அனைத்து பணிகளையும் 100 நாள் வேலைதிட்ட பெண்களிடம் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக கூலி வழங்காமல் அலைக்கழித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா பழனியின் மகன்கள் தலைவர் போல் செயல்பட்டு 100 நாள் பணியில் ஈடுபடும் பெண்களை அவதூறாக பேசுவதாகவும் கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதை கண்டித்தும், சம்பளம் வழங்க வலியுறுத்தியும் வாணியம்பாடியில் இருந்து வெலதிகாமணி, திம்மாம்பேட்டை, வழியாக ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிகளுக்கு செல்லும் தும்பேரி கூட்ரோட்டில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த வார்டு உறுப்பினரை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் வாணியம்பாடி - திம்மாம்பேட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story