100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும்


100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும்
x

100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பத்தூர்

விவசாய பணிகளுக்கு

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 43 விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

சொட்டுநீர் பாசனத்திற்கு வழங்கப்படும் பைப்புகள் போதுமானதாக இல்லை. எனவே பைப்புகளை கூடுதலாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. எனவே 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கரும்பு உற்பத்தி

திருப்பத்தூர் மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முத்திரை பதித்தது. அதனால்தான் திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய பகுதிகளில் சர்க்கரை ஆலைகள் உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, கருப்புக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஆம்பூர் சர்க்கரை ஆலை மூடப்பட்டது. திருப்பத்தூர் சர்க்கரை ஆலைக்கும் வெளியில் இருந்துதான் கரும்பு கொண்டு வரப்படுகிறது. இதனால் 2 சர்க்கரை ஆலைகளின் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை கண்டறிந்து மீண்டும் கரும்பு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் மணல் திருட்டு அதிகமாக நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பாலாற்று பாலம் சேதமடையும் நிலையில் உள்ளது. எனவே மணல் திருட்டை தடுக்கவும், பாலாற்று ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுதானியம்

சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் ரெயில் தண்டவாளம் அமைந்துள்ள இடத்தில் 100 ஏக்கருக்கு மேல் சதுப்பு நிலம் உள்ளது. அங்கு சதுப்புநில அடர்காடு உருவாக்க வேண்டும். இந்த ஆண்டை அரசு சிறுதானிய ஆண்டாக அறிவிவித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் பரியிட இலவசமாக வழங்க வேண்டும்.

உமராபாத் பகுதியில் திறக்கப்படாமல் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை உடனே திறக்கவேண்டும். மாவட்டத்தில் தென்னை மரத்தில் இருந்து பதநீர், கள் இறக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டியப்பனூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பதில் அளித்து பேசியதாவது:-

சொட்டுநீர் பாசனத்திற்கு வழங்கப்படும் பைப்புகளை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு விவசாயத்தை அதிகரிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கோழி இறைச்சி கழிவுகளை மீன்களுக்கு உணவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பாலாற்று பகுதியில் மணல் திருட்டை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புதூர்நாடு, ஏலகிரிமலை, நாயக்கனேரிமலை ஆகிய மலைப்பகுதியில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்,

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை இணைஇயக்குனர் பாலா, துணை இயக்குனர் பச்சையப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு சிறுதானிய கம்பு கொழுக்கட்டைகள், முருங்கை சூப் ஆகியவை வழங்கப்பட்டது.


Next Story