குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் 100 நாள் வேலை வழங்குவதா?ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண் தொழிலாளர்கள் தர்ணா
குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் 100 நாள் வேலை வழங்குவதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண் தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண் தொழிலாளர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் தொழிலாளர்கள் கூறுகையில், எங்களது கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில்(100 நாள் வேலை) அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்குவதில்லை. மாறாக குறிப்பிட்ட சில தொழிலாளர்களுக்கு மட்டுமே ஊராட்சி நிர்வாகம் வேலை வழங்குகிறது. எங்களுக்கு வேலை வழங்க மறுக்கிறார்கள். எனவே பாரபட்சம் பார்க்காமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.