டாக்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 100 பவுன் நகைகள்-ரூ.2 லட்சம் மீட்பு


டாக்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 100 பவுன் நகைகள்-ரூ.2 லட்சம் மீட்பு
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் டாக்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 100 பவுன் நகைகள்-ரூ.2 லட்சம் மீட்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் டாக்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 100 பவுன் நகைகள்-ரூ.2 லட்சம் மீட்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

100 பவுன் நகைகள்-ரூ.2 லட்சம் கொள்ளை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரெயில் நிலைய தெருவில் வசித்து வருபவர் பிரேம்குமார் தாமஸ், பிரபல குழந்தைகள் நல டாக்டரான இவருடைய மகள் சென்னையில் டாக்டருக்கு படிப்பதால் அவரை சந்திப்பதற்காக டாக்டர் குடும்பத்தினர் கடந்த மாதம் 13-ந் தேதி சென்னைக்கு சென்றனர்.

அப்போது அவரது வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

தனிப்படை

இந்த ெகாள்ளை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடிக்கவும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, கார்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ், காமராஜ், உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் சம்பவத்தன்று டாக்டர் வீட்டு பகுதியில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடி ரெயில் நிலையத்திற்கு செல்வதும் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பின்னர் பயணிகள் வரும் வழியாக மெயின் ரோட்டிற்கு வந்து அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் ஒருவரிடம் 'லிப்ட்' கேட்டு அங்கிருந்து புதிய பஸ் நிலையம் சென்று தப்பி சென்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் ஏதேனும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு உள்ளாரா?. என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அண்ணன்-தம்பி

போலீசாரின் தீவிர விசாரணையில் அவர், புதுச்சேரி தவளக்குப்பம் முதலியார் நகரில் வசித்து வரும் ராஜன் மகன் பிரவீன் குமார்(வயது 30) என்பதும், அவருடன் சேர்ந்து அவருடைய சகோதரர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கக்கரை மேலத்தெருவை சேர்ந்த செல்வகுமார்(26) மற்றும் ஒருவர் என 3 பேர் சேர்ந்து டாக்டர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களின் செல்போன் எண்களை வைத்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று போலீசார் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

கைது; 100 பவுன்-ரூ.2 லட்சம் மீட்பு

இந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் குமார் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரையும் வேதராண்யம் ரவுண்டானா அருகே வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைதான சகோதரர்களிடம் இருந்து டாக்டர் பிரேம்குமார்தாஸ் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 100 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை மீட்டனர்.

உரிமையாளரிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை டாக்டர் பிரேம்குமார் தாமஸ்சிடம் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் ஒப்படைத்தார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறும்போது, திருத்துறைப்பூண்டியில் டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு போலீசாருக்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகுந்த உதவியாக இருந்தது.

பாராட்டு

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தென்பட்டால் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மற்றும் வர்த்தக சங்கத்தினர் பாராட்டினர்.


Next Story