சொகுசு காரில் கொண்டு வந்த 100 பவுன் நகை, 8½ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்


சொகுசு காரில் கொண்டு வந்த 100 பவுன் நகை, 8½ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே நள்ளிரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சொகுசு காரில் கொண்டு வந்த 100 பவுன் நகை, 8½ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர்

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் கும்பகோணம் சாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக வந்த கருப்பு நிற சொகுசு காரை மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 100 பவுன் நகைகள், 8½ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை இருந்தது.

போதிய ரசீது இல்லை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த காரில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் எழில்மாறன், கடை ஊழியர் அய்யப்பன், கார் டிரைவர் செந்தில்குமார் ஆகியோர் என்பதும், நகைக்கடைக்கு தேவையான நகைகளை சென்னையில் வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு செல்வதும் தெரிந்தது. ஆனால் அந்த நகைகளை வாங்கியதற்கான போதிய ஆவணங்கள் மற்றும் ரசீது அவர்களிடம் இல்லை.

வருமான வரித்துறை விசாரணை

இதையடுத்து சொகுசு காருடன் நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அதனை பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா விசாரணை நடத்தினார்.

மேலும் இது தொடர்பாக கடலூரில் உள்ள வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் பண்ருட்டிக்கு சென்று தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், ரொக்கத்தை கைப்பற்றி நகைக்கடை உரிமையாளர் எழில்மாறனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story