மழை பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் 100 பணியாளர்கள்


மழை பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் 100 பணியாளர்கள்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி கூறினார்.

திருப்பத்தூர்

தொடர் மழை

திருப்பத்துர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தூர்வாரப்படாத கால்வாய்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் அவை மக்கள் வசிப்பிடங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை திருப்பத்துர் கோட்ட பொறியாளர் முரளி உத்தரவின் பேரில், புதுப்பேட்டை, சிங்காரப்பேட்டை, தர்மபுரி ரோடு, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் துரிதப் பணியில் ஈடுபட்டு, மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் மனிதர்களால் இடையூறுகளை அகற்ற முடியாத இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலமாகவும் தண்ணீர் அகற்றும் பணியில் நெடுஞசாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

100 பணியாளர்கள்

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முரளி கூறுகையில் மழை பெய்வதால், நெடுஞ்சாலைத்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 100 பேர் நியமிக்கப்பட்டு அவர்கள் எங்காவது மரம் விழுந்தது, மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு எனத் தகவல் வந்தால், உடனடியாக அங்கு சென்று மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் இருக்க இடையூறுகளை அப்புறப்படுத்தி வருகிறோம்.

ஏலகிரி, புதூர் நாடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில், அதிக கவனத்துடன் இருக்க எங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு ஏதாவது இயற்கை இடையூறுகள் ஏற்பட்டால், உடனடியாக அதை அப்புறப்படுத்தி, போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பார்த்து வருகிறோம். மொத்தத்தில் மாவட்டத்தில் மழையால் எவ்வித பாதிப்பும் மக்களுக்கு வந்து விடாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story