ஆயிரம் ஏக்கரில் பயறு சாகுபடி செய்ய இலக்கு
ஆயிரம் ஏக்கரில் பயறு சாகுபடி செய்ய இலக்கு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் பயறு சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்படுவதாவது:-
பயறு சாகுபடி
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம், மடத்துக்குளம் மற்றும் உடுமலை வட்டாரங்களில் சுமார் 11 ஆயிரம் ஏக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல் சாகுபடிக்கு பின்பு தரிசாக உள்ள நிலங்களில் பயறுவகை பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிரிட சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு பின்பு 1000 ஏக்கர் பரப்பளவில பயறுவகை சாகுபடி செய்ய இலக்குடன் அனைத்து வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களும் முடுக்கிவிடப்பட்டு கிராம, வட்டார மற்றும் மாவட்ட அளவில் முகாம்கள் நடத்தி நெல் தரிசில் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின்கீழ் 50 சதவீத மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கவும், விதை கிராம திட்டத்தின்கீழ் விதைகளுக்கு மானியம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயறுவகை சாகுபடிக்கு தேவையான சுழல் கலப்பைகள், விசைத்தெளிப்பான்கள், சொட்டுநீர் பாசன கருவிகள், தெளிப்புநீர் பாசன கருவிகள், மழை தூவுவான் கருவிகள் பல்வேறு திட்டங்களிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
கூடுதல் மகசூல்
பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்ய செலவு குறைவு. மேலும் 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஒரு ஏக்கருக்கு 300 கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பயறுவகை பயிர்கள் பயிரிடுவதில் மண்வளம் மேம்படுகிறது. பயறுவகை பயிர்கள் வாயு மண்டலத்திலுள்ள நைட்ரஜன் சத்தை மண்ணில் நிலை நிறுத்துகிறது. அதன்மூலம் மண்வளம் அதிகரித்து அடுத்த பயிர் சாகுபடியில் விளைச்சல் அதிகரிக்கிறது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.