ரூ.1,000 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்- அமைச்சர் சக்கரபாணி தகவல்


ரூ.1,000 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்- அமைச்சர் சக்கரபாணி தகவல்
x
தினத்தந்தி 16 Sept 2023 5:45 AM IST (Updated: 16 Sept 2023 12:25 PM IST)
t-max-icont-min-icon

பழனி, ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் ரூ.1,000 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

திண்டுக்கல்

5,105 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியில், மக்கள் தொடர்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார்.

விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.41 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 5,105 பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற அவர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடந்து வருகிறது.

10 ஆயிரம் பேருக்கு பட்டா

ஆட்சி பொறுப்பு ஏற்ற 2 ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதியதாக 4 ஆயிரத்து 325 ரேஷன்கார்டுகள் வழங்கப்படவுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 10 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படவுள்ளது.

ரூ.1000 கோடியில் குடிநீர் திட்டம்

ஒட்டன்சத்திரம், பழனி சட்டமன்ற தொகுதிகளுக்கு, காவிரி நீர் ஆதாரத்தை கொண்டு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அந்த தொகுதிகளில், இன்னும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

இதேபோல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

விழாவில் பழனி ஆர்.டி.ஓ. சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story