1,000 ஆடுகள்-3 ஆயிரம் கோழிகளைசமைத்து அன்னதானம்
திண்டுக்கல் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் 1,000 ஆடுகள், 3 ஆயிரம் கோழிகளை சமைத்து அன்னதானம் நடந்தது.
ஆடுகள், கோழிகள் காணிக்கை
திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 31-ந்தேதி இரவு வாணவேடிக்கை முழங்க புனிதர்களின் மின்தேர் பவனி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும், 8 மணிக்கு புனிதருக்கு காணிக்கை பவனியும் நடந்தன. இதில் ஏராளமான மக்கள் புனிதருக்கு காணிக்கை செலுத்தும் வகையில் ஆடுகள், கோழிகள், அரிசி மற்றும் காய்கறிகளை ஊர்வலமாக கொண்டு வந்து ஆலயத்தில் வழங்கினர்.
ஒரு சிலர் வாத்திய கருவிகளை இசைத்தபடி ஆடுகள், கோழிகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதன்படி ஆயிரம் ஆடுகள், 3 ஆயிரம் கோழிகளை மக்கள் காணிக்கையாக செலுத்தினர்.
அசைவ விருந்து
இதையடுத்து மக்கள் காணிக்கையாக செலுத்திய ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவை கொண்டு அசைவ விருந்து தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டனர். அந்த வகையில் 4 டன் அரிசி, 3 டன் காய்கறிகள் மற்றும் 1,000 ஆடுகள், 3 ஆயிரம் கோழிகளை கொண்டு அசைவ உணவு தயாரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு புனிதரின் மன்றாட்டு பிரார்த்தனை, வேண்டுதல் பூஜை ஆகியவை நடத்தப்பட்டு, இரவு 7 மணிக்கு அன்னதானம் தொடங்கியது.
முத்தழகுப்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அசைவ விருந்தில் கலந்து கொண்டனர். இந்த அன்னதானம் விடிய, விடிய நடைபெற்றது.