1,000 புதிய பஸ்கள் வாங்கப்படும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை,
பள்ளி கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கென அரசு பள்ளிகளுக்கு சுமார் 26 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சுற்றுச்சுவரும் கட்டுவதற்கும், பராமரிப்புப் பணிகளுக்கும் சுமார் ரூ.2 ஆயிரத்து 200 கோடி என மொத்தம் சுமார் ரூ.12 ஆயிரத்து 300 கோடி தேவை என்று கண்டறியப்பட்டது. அவற்றைப் படிப்படியாக ஏற்படுத்தித் தருவதற்கென 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, நடப்பாண்டில் சுமார் ரூ.1,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. தரமான கல்வியை நமது அரசு பள்ளிகள் வழங்கி வருவதால், கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளார்கள். எனவே, அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயர்ந்துள்ளதால், கூடுதலான வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் கட்டப்படும்
இதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு சுமார் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் ரூ.250 கோடியில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1,050 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாக கட்டப்படும்.
பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கென நடப்பாண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் ரூ.150 கோடி நிதியுடன் சேர்த்து, தற்போது ரூ.115 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசு பள்ளிகளை நாடி வரும் மாணவர்களுக்கு தரமான பள்ளி கட்டமைப்பு கிடைக்க பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும்.
மாநகராட்சி பகுதிகளில் சாலை மேம்பாடு
தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 55 ஆயிரத்து 567 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில், 6 ஆயிரத்து 45 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ளன. மேலும், 2016-2017-ம் ஆண்டிற்கு பின்பு மேம்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள சாலைகள் உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும். இதற்காக, தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக, நடப்பு நிதியாண்டிலேயே ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு, 4 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.
இதுதவிர, சிங்கார சென்னை 2.0, மாநில நிதிக்குழு மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம், நபார்டு வங்கி நிதி உதவித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, ரூ.7,388 கோடி மதிப்பீட்டில் 16 ஆயிரத்து 390 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும்.
1,000 புதிய பஸ்கள்
அரசின் மிகச்சிறந்த சேவை திட்டமான மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண வசதியின் மூலமாக மகளிர் நாளொன்றுக்கு சராசரியாக 44 லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். இதற்காக 7,105 சாதாரண கட்டண நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த கட்டணமில்லா பஸ்களை அன்றாடம் வேலைக்கு செல்லும் பெண்கள், சிறு வியாபாரம் செய்யக்கூடிய தாய்மார்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை சுமார் ரூ.2,000 கோடி மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது.
இதனை அரசு தனது வருமான இழப்பாக கருதவில்லை. மகளிர் மேம்பாட்டுக்கான வளர்ச்சித்திட்டமாகவே கருதுகிறது. பொதுமக்களின் பஸ் பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக்கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பஸ்களை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பஸ்களை புதுப்பித்திடவும் அறிவுறுத்தியிருக்கிறேன்.
இதுமட்டுமன்றி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு 2 ஆயிரத்து 213 டீசல் பஸ்களையும் 500 மின்சாரப் பஸ்களையும் வாங்கவும், உலக வங்கி உதவியோடு மேலும் 1,000 பஸ்களை இயக்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கிடையே இத்தகைய திட்டங்களை தீட்டுகிறோம். சொன்னதைச் செய்ய மட்டுமல்ல; சொல்லாததையும் செய்யவும் முயற்சித்து வருகிறது நம்முடைய தமிழ்நாடு அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.