உலமாக்கள் குழந்தைகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை; அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு


உலமாக்கள் குழந்தைகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை; அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு
x

உலமாக்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் சிறுபான்மையினர் நலன் துறை மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய உறுப்பினர்களுக்கு இந்த துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலுரை வழங்கி பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

* ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினருக்கு 2,500 விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் எந்திரங்கள் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் வழங்கப்படும்.

* உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

* உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

* உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து மரணத்துக்கான உதவித்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

2 புதிய விடுதிகள்

* சென்னை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.81 லட்சத்து 68 ஆயிரம் செலவில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் தொடங்கப்படும்.

* கபர்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலங்களுக்கு ரூ.1 கோடி செலவில் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கப்படும் மற்றும் புனரமைக்கப்படும்.

* சென்னை ராயப்பேட்டையில் ஒரு சிறுபான்மையினர் கல்லூரி மாணவிகள் விடுதிக்கு ரூ.6 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.

முஸ்லிம் மகளிர் உதவி சங்கம்

* கோவை, திருச்சி மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் ரூ.2 லட்சம் செலவில் புதிதாக தொடங்கப்படும்.

* கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலம் ரூ.1 கோடி செலவில் நடத்தப்படும்.

மேற்கண்டவாறு அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்.


Next Story