இலவச வேட்டி உற்பத்திக்காக 1,000 டன் நூல் வெளிமார்க்கெட்டில்கொள்முதல் செய்ய அரசு உத்தரவு
இலவச வேட்டி உற்பத்திக்காக 1,000 டன் நூல் வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவச வேட்டி உற்பத்திக்காக 1,000 டன் நூல் வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவச வேட்டி-சேலை
தமிழக அரசின் சார்பில், பொங்கல் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான நூல் விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்பட்டு அதன் பின்னர் தான் உற்பத்தி தொடங்கப்படும். ஆனால் வேட்டி உற்பத்திக்கான நூல் கொள்முதல் செய்வதில் இ-டெண்டர் தள்ளி போவதால் உரிய நேரத்தில் வேட்டி உற்பத்தியை முடிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும், எனவே வேட்டி உற்பத்தி செய்வதற்கான நூலை தற்காலிகமாக வெளிமார்க்கெட்டில் குறிப்பிட்ட அளவு கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும் என்றும் விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், 40-ம் எண் காட்டன் நூல் கிலோ ரூ.278-க்கு விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் நேரடியாக வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு விசைத்தறியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
1,000 டன் நூல் கொள்முதல்
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறும்போது, 'தமிழக அரசின் இலவச வேட்டி உற்பத்திக்கு, 40-ம் எண் காட்டன் நூல் இ-டெண்டர் மூலம் 1,000 டன் கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் டெண்டர் தள்ளிப்போவதால் வேட்டி உற்பத்தி செய்வதற்கான நூல் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டெண்டர் இறுதி செய்யும் வரை தற்காலிகமாக வெளிமார்க்கெட்டில் 40-ம் எண் நூல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து எங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் வேட்டி உற்பத்திக்கான 40-ம் எண் நூல் வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால் நூலை வாங்கி, உற்பத்தியை விரைவுப்படுத்துவது சிரமமானது. எனவே வரும் ஆண்டுகளில் முன்னதாகவே இதுகுறித்து திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்' என்றனர்.