10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் ஆற்றின் கரையோர கிராமங்களில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது.தற்போது அப்பகுதியில் படிப்படியாக தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் வடியக்கூடிய தண்ணீர் சரியாக வடியாததால் ஆற்றின்கடைமடை பகுதியான மகேந்திரபள்ளி, காட்டூர், தர்காஸ், அனுமந்தபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி

காட்டூர் கிராமத்தில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வடிகால் வசதியின்றி அழுகிய நிலையில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. கொள்ளிடம்ஒன்றியத்தில் ஆற்றின் கடைமடை பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் வெள்ளப் பெருக்கினால் ஆற்றின் கரையோர மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனா். கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்தால் அழுகிய பயிர்களை அழித்துவிட்டு புதிய சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.மேலும் பருவ மழை தொடங்கி விட்டால் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று அவர்கள் கவலையுடன் கூறினர். மேலும் காட்டூர் கிராமங்களில் உள்ள குடிசை வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதால் வடிய வசதியின்றி அப்பகுதி முழுவதும் வீட்டில் சுவர்கள் ஈரம் உறிந்த நிலையில் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டில் கூட தூங்க முடியாத நிலையில் உள்ளனர்.

அதிகாரிகள் பாா்வையிட்டனர்

காட்டூர் கிராமத்தில் இருந்து கொள்ளிடம் ஆற்றிற்கு செல்லும் சாலை உடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, வேளாண்மை அலுவலர் ஹரிப்ரியா, வேளாண்மை உதவி அலுவலர்கள் கொளஞ்சிநாதன், பாலச்சந்தர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினர் லட்சுமி பாலமுருகன், ஊராட்சி தலைவர் வடிவேல் மற்றும் விவசாய பிரதிநிதிகள் இருந்தனர்.

வடியாத வெள்ளநீர்

கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்ததால் வெள்ள நீர் படிப்படியாக குறைய தொடங்கி வருகிறது. கடல் சீற்றம் காரணமாக அற்றில் அதிக தண்ணீர் வடிவதற்கு தாமதமாகி வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களை சேர்ந்த நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கோரைதிட்டு, மேலவாடி, உள்ளீட்டு கிராமங்களில் கடந்த 15 நாட்களாக வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் உள்ளது.இதனால் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை தங்கிய நிலையில் இருந்து வந்தனர். இதனால் அந்த பகுதி மக்களால் தீபாவளியை கூட சரியாக கொண்டாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதால் கிராமங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரின் அளவும் தற்போது குறைய தொடங்கியுள்ளது.

பயிர்கள் சேதம்

இதனால் ஒரு சில பகுதிகளில் தாழ்வான உள்ள இடங்களில் குடிசை வீடுகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வீட்டின் சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளது. இப்பகுதியில் மேடான இடங்களில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் வடிந்த நிலையில் தங்கள் குடியிருப்புகளில் வசிக்க முடியாத நிலையில் ஈரப்பதம் இருப்பதால் அரசின் முகாமிலேயே தங்கிவருகின்றனர்.ஒரு சில இடங்களில் தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டிற்கு சென்று வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படுகை கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டப்பயிர்கள், நெற்பயிர்கள், சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சாலைகள் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டு கிராமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன.


Next Story