முதல் கட்டமாக 10 ஆயிரம் பேர் தேர்வு
முதல் கட்டமாக 10 ஆயிரம் பேர் தேர்வு
கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி. கணேசன் ெதரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழக வாரிய தலைவர்கள் பொன்குமார், கவுதமன், மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் ஜெயபால் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி. கணேசன் கலந்துகொண்டு ரூ.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கல்வி, பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இறப்பு உதவி தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவி தொகைகள் 1 லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு நிலுவை தொகை வழங்கப்பட்டது.
வீடு கட்ட ரூ.4 லட்சம்
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுடைய குழந்தைகளுக்கு திருமணம், கல்வி உதவித்தொகை ஆகியவை 2-ல் இருந்து 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் கடன் உதவி வழங்கும் திட்டம் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் வரை மானியத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு
நாகை மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில், தொழிலாளர் நல வாரியம் மூலம் 15,000 பேருக்கு ரூ.8 கோடியே 85 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் பல்வேறு உதவி தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் மெகா வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இ்வ்வாறு அவர் கூறினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் முகமதுஷாநவாஸ், நாகை மாலி, பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.