அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 கலசாபிஷேகம்
அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமிக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது
திருவண்ணாமலை
அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமிக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்குகிறது. கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது.
இதையொட்டி அன்றில் இருந்து சிவன் கோவில்களில் மூலவருக்கு தாராபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
தாராபிஷேகம் என்பது சிவலிங்கத்திற்கு மேல் தாராபாத்திரம் பொருத்தப்பட்டு அதில் ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்ட வாசன திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனிதநீர் காலையில் இருந்து மாலை வரை சாமி மீது துளித் துளியாக விழுந்து அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.
அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சாமிக்கு இன்று வரை தாராபிஷேகம் நடத்தப்பட்டு இருந்தது.
அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி கடந்த 26-ந் தேதி முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தின் முன்பு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி யாக பூஜை இன்று காலை வரை நடைபெற்றது.
1008 கலசாபிஷேகம்
26-ந் தேதி காலை கோவிலில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை போன்றவை நடைபெற்றது. அன்று இரவு புனிதநீர் அடங்கிய 1008 கலசங்கள் வைத்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
நேற்று 2-ம் கால மற்றும் 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 4-ம் கால யாக பூஜை நடந்தது.
இதில் ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க வேத மந்திரங்களை கூறினர். பின்னர் மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து 1008 கலசங்களில் உள்ள புனிதநீர் மூலம் அருணாசலேஸ்வரருக்கு கலசாபிஷேகம் செய்தனர். புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் மங்கள வாத்திய முழங்க பிரகார உலா வந்து சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவின் சாமி மாட வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
============