அம்மச்சார் அம்மனுக்கு 1008 குட பாலாபிஷேகம்
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மனுக்கு 1008 குட பாலாபிஷேகம் நடந்தது.
செஞ்சி, மே:
செஞ்சி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள அம்மச்சார் அம்மன், செல்வவிநாயகர், பெருமாள் கோவிலில் தேரோட்ட விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் 1008 பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மச்சார் அம்மன், செல்வவிநாயகர், பெருமாளுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதில் முன்னாள் மத்திய ரெயில்வே இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கிருஷ்ணதாஸ் ரெட்டியார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் அனைத்து உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று(வியாழக்கிழமை) குருபூஜை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 14-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.