1,008 பால்குட ஊர்வலம்
பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி 1,008 பால்குடம் ஊர்வலம் நடந்தது.
பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நேற்று காலை 1,008 பால்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக நகரில் உள்ள பல்வேறு வார்டுகளில் இருந்தும் பெண்கள் பால்குடத்துடன் காந்திரோட்டில் உள்ள பாண்டிய வேளாளர் சமூக திருமண மண்டபத்துக்கு வந்தனர். அங்கு பால்குடங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின்னர் பால்குட ஊர்வலத்தை சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர் சிவனேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பால்குட ஊர்வலம் சென்று மாரியம்மன் கோவிலை அடைந்தது.
இதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் மாரியம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. மேலும் மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் மாரியம்மனுக்கு அன்னத்தால் அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் கோவில் முறை பண்டாரங்கள் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பழனி நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் தனசேகர், பழனிவேலு, கார்த்திக், செந்தில், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஜே.பி.சரவணன், வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் செந்தில், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் பழனி வ.உ.சி. மன்றம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மிராஸ் பண்டாரங்கள் சங்கம், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்க பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.