102 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்


102 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்
x

வேலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கும் நபர்களை மீட்க 102 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கும் நபர்களை மீட்க 102 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, வேலூர், ராணிப்பேட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று சாரல் முதல் மிதமான மழை இடி, மின்னல் காற்று இன்றி தொடர்ந்து பெய்தது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் மற்றும் சாலையோர பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

குறைவான வேகத்தில் மழை பெய்ததால் வேலூர் நகரில் மழைவெள்ள பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையில் 60 பேர் அடங்கிய குழுவினரும், தீயணைப்புத்துறையில் 102 வீரர்களும் மழை வெள்ளத்தில் சிக்கும் நபர்களை மீட்க தயார் நிலையில் உள்ளனர்.

தயார் நிலையில் 102 வீரர்கள்

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், மழை, வெள்ளம், தீவிபத்து உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது பொதுமக்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். தற்போது வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் எதிர்பாராத விதமாக சிக்கி தவிக்கும் நபர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வேலூர், காட்பாடி, ஒடுகத்தூர், குடியாத்தம், கே.வி.குப்பம் என்று 5 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. 5 நிலைய அலுவலர்கள் தலைமையில் 102 தீயணைப்பு வீரர்கள் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை முடியும் வரை விடுமுறை எடுக்க வேண்டாம் என்று அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக வேலூர், குடியாத்தத்தில் 2 படகுகள் உள்ளன. இவற்றில் 5 பேரை பத்திரமாக வேறு இடத்துக்கு அழைத்து செல்லலாம். அதைத்தவிர தண்ணீரை வெளியேற்ற மின்மோட்டார், கயிறு, மரம்அறுக்கும் எந்திரம், மழை ஜாக்கெட் உள்ளிட்ட உபகரணங்களும் தயாராக உள்ளன. வேலூர் மாநகராட்சி நிர்வாகம், காவல்துறையினருடன் இணைந்து தீயணைப்புத்துறையினர் செயல்பட உள்ளனர் என்று தெரிவித்தனர்.


Next Story