103 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்


103 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் 103 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். அனல் காற்றும் வீசியதால் சாலைகள் வெறிச்சோடியது.

கடலூர்

கடலூர்:

தமிழகத்தில் 'அக்னி' நட்சத்திரம் எனப்படும் கத்திரி' வெயில் காலம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும் பின்னர் படிப்படியாக அதிகரித்தது. மாவட்ட தலைநகரான கடலூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து 100 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. மதிய வேளைகளில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.இந்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் திடீரென உச்சத்தை அடைந்தது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு, அக்னி நட்சத்திர காலத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் சாலைகளில் அனல்காற்று வீசியது. வறுத்தெடுத்த வெயிலின் புழுக்கத்தால் கைக்குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள்.

வீட்டுக்குள் முடங்கினர்

இதேபோல் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இளம்பெண்கள் துப்பட்டாவை கண்கள் மட்டுமே தெரியுமாறு முகத்தில் கட்டிக்கொண்டு ஸ்கூட்டர் ஓட்டுவதுபோல் நேற்று ஆண்களும் துணியால் முகத்தை மறைத்தவாறும், தொப்பிகள் அணிந்தபடியும் மோட்டார் சைக்கிள் ஓட்டியதை நகரில் ஆங்காங்கே காண முடிந்தது. மேலும் பெரும்பாலான மக்கள் மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் கடலூரில் எந்நேரமும் பரபரப்புடன் காணப்படும் இம்பிரீயல் சாலை, நேதாஜி சாலை, பாரதி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்ததை காண முடிந்தது.

குளிர்பான விற்பனை ஜோர்

வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து இளைப்பாறுவதற்காக மாநகராட்சி பூங்கா, மற்றும் சாலையோர மரத்தடிகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், தர்பூசணி, மோர், பழச்சாறு, நுங்கு போன்றவற்றின் விற்பனையும் படுஜோராக நடந்தது. ஐஸ்கிரீம், குளிர்பான கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. மாலையில் கடலூர் சில்வர் பீச் கடற்கரையில் காற்று வாங்கவும், கடலில் குளியல் போடவும் வழக்கத்தை விட திரளான பொதுமக்கள் திரண்டனர்.


Next Story