திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் பகுதியில் ஒரேநாளில் 105 திருமணம்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் பகுதியில் நேற்று ஒரே நாளில் 105 திருமணம் நடந்தது.
நெல்லிக்குப்பம்,
தேவநாதசாமி கோவில்
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டிக் கொள்பவர்கள் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொள்வார்கள். இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக கோவிலுக்கு திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக முகூர்த்த நாட்களில் தேவநாத சாமி கோவில் சாலை பகுதி மற்றும் அருகே உள்ள மண்டபங்களில் திருமணம் நடைபெற்று வருகிறது.
அலைமோதிய கூட்டம்
அந்த வகையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் அதிகாலை 4 மணி முதல் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற தொடங்கியது. இந்த திருமணங்களுக்கு மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வாகனங்களில் குவிந்தனர். இதனால் கோவில் பகுதி சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலைகளில் கூட்டம் அலைமோதியது. திருமணங்களுக்கு வந்தவர்கள் தேவநாதசாமி மற்றும் மலை மீது அமைந்துள்ள ஹயக்கிரீவர் சாமிகளை தரிசனம் செய்தனர். இன்று மட்டும் கோவில் பகுதி சாலையில் 80 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 25 திருமணங்கள் என 105 திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் கடலூர் - பாலூர் சாலையில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.